காசி ஆனந்தன்

காசி ஆனந்தன் (1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

காசி ஆனந்தன்
 

இளமைக் காலம்

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.

போராட்டத்தில் இணைவு

பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் சிறீலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

தமிழகத்தில்

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி சென்றார்.

மாமனிதர் விருது

பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார்.

 

 

முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்

பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்


 


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .


 


சாமி..


 

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.


 


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

 

Make a Free Website with Yola.